மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள டபல்பா நகரில், அந்நாட்டு ராணுவம் மேற்கொண்ட அதிரடித் தாக்குதலில் சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் நெமேசியோ ஒசேகுரா (59) கொல்லப்பட்டார். 'சிஜேஎன்ஜி' (CJNG) என்ற பயங்கரவாத போதைப்பொருள் அமைப்பின் தலைவரான இவர், 'எல் மென்சோ' என்று பரவலாக அறியப்பட்டவர். ராணுவப் புலனாய்வுப் பிரிவு கொடுத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் படுகாயமடைந்த அவரை ஹெலிகாப்டர் மூலம் மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்ல முயன்றபோது அவர் உயிரிழந்ததாகப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் 15 மில்லியன் டாலர் பரிசு!
கொக்கைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை அமெரிக்காவுக்குக் கடத்துவதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட நெமேசியோவை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 15 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகள் அறிவித்திருந்தன. குறிப்பாக, மெக்சிகோவிலிருந்து கடத்தப்படும் போதைப்பொருட்களைத் தடுக்கத் தவறினால் அந்த நாட்டின் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில், மெக்சிகோ அதிபர் கிளாடியா தலைமையிலான அரசு மேற்கொண்ட இந்த அதிரடி ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா வெகுவாக வரவேற்றுள்ளது.
இந்தியர்களுக்குத் தூதரகம் எச்சரிக்கை!
தங்கள் தலைவன் கொல்லப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, நெமேசியோவின் ஆதரவாளர்கள் மெக்சிகோவின் பல்வேறு மாகாணங்களில் பயங்கர வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் சென்ற கார்கள் மற்றும் பொது வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதால் அங்கு போர் மேகம் சூழ்ந்துள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் தீவிரமாகப் போராடி வருகிறது. இதற்கிடையில் மெக்சிகோவில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
