மணிப்பூரில் வசித்து வந்த விவிலிய காலத்து இஸ்ரேலிய பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், இஸ்ரேல் அரசின் சிறப்பு நடவடிக்கையின் கீழ் நேற்றுமுன்தினம் டெல் அவிவ் நகரை சென்றடைந்தனர்.
உற்சாக வரவேற்பும் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பும்
டெல் அவிவ் விமான நிலையம் வந்தடைந்த இக்குழுவினரை, இஸ்ரேலிய தேசியக் கொடியின் நீலம் மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளுடன் அந்நாட்டு மக்கள் வரவேற்றனர். பாரம்பரிய யூதப் பாடல்களைப் பாடி உற்சாகப்படுத்திய அந்த தருணத்தில், நீண்ட காலத்திற்குப் பிறகு உறவினர்களைச் சந்தித்த பல குடும்பங்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தன. மணிப்பூரில் அண்டை வீட்டாராக இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலுக்குச் சென்ற தாகன் சோலட் என்பவர், தனது நண்பரை வரவேற்க வந்திருந்தார். தனது மகனை இந்தியாவில் கைகளில் சுமந்து வளர்த்த நண்பரை மீண்டும் சந்தித்தது உணர்ச்சிப்பூர்வமான தருணமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.
மெனாஷே வம்சாவளியின் வரலாற்றுப் பயணம்
இவர்கள் கி.மு. 720-ல் அசிரியப் படையெடுப்பாளர்களால் நாடு கடத்தப்பட்ட இஸ்ரேலின் 10 பழங்குடி இனங்களில் ஒன்றான ‘மெனாஷே’ வம்சாவளியைச் சேர்ந்த ‘பெனே மெனாஷே’ சமூகத்தினர் ஆவர். இவர்களது செவிவழி வரலாற்றுத் தகவல்களின்படி, பெர்சியா, ஆப்கானிஸ்தான், திபெத் மற்றும் சீனா வழியாகப் பல நூற்றாண்டுகளாக இடம்பெயர்ந்து இறுதியில் மணிப்பூரை வந்தடைந்துள்ளனர். நீண்ட கால இடப்பெயர்ச்சியின் போதும் விருத்தசேதனம் போன்ற யூத மதச் சடங்குகளை இவர்கள் விடாமல் கடைபிடித்து வந்துள்ளனர். பின்னர் 19-ம் நூற்றாண்டில் மிஷனரிகளால் இவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுவாழ்வுத் திட்டமும் எதிர்கால நடவடிக்கையும்
‘ஷாவே இஸ்ரேல்’ அமைப்பின் கூற்றுப்படி, இதுவரை சுமார் 4,000 பேர் இஸ்ரேலில் குடியேறியுள்ளனர், இன்னும் 7,000 பேர் இந்தியாவில் உள்ளனர். கடந்த நவம்பரில் 4,600 பேரை அழைத்து வர இஸ்ரேல் அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து வந்துள்ள முதல் குழுவினர் இவர்களாவர். தற்போது வந்துள்ள 250 பேரும் வடக்கு இஸ்ரேலில் குடியமர்த்தப்படுவார்கள். இவர்கள் முழுமையான குடியுரிமை பெற முறையாக யூத மதத்திற்கு மாற வேண்டியது அவசியமாகும். ஆண்டுக்கு 1,200 பேர் வீதம் இச்சமூகத்தினர் அனைவரையும் இஸ்ரேலுக்கு அழைத்து வரும் மாபெரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாக இஸ்ரேலிய குடியேற்றத் துறை அமைச்சர் ஓஃபிர் சோஃபர் தெரிவித்துள்ளார்.
