மலேசிய வெளியுறவு அமைச்சகம், மலேசிய தொழில்நுட்பக் கூட்டுறவுத் திட்டத்தின் (MTCP) கீழ் சர்வதேச மாணவர்களுக்கான பிரத்யேக கல்வித்தொகை (Scholarship) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மலேசியாவில் தங்களது உயர்கல்வியைத் தொடரலாம். இந்தத் திட்டத்திற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 4, 2026 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 12, 2026 ஆகும்.
கல்வித்தொகை வழங்கும் சலுகைகள்
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்குப் படிப்பிற்கான முழு கல்விக் கட்டணமும் (Full tuition fees) தள்ளுபடி செய்யப்படும். அத்துடன், மாணவர்களின் மாதாந்திரச் செலவுகளுக்கான உதவித்தொகை (Monthly allowance) மற்றும் படிப்பை மேற்கொள்வதற்காக மலேசியா சென்று வரக்கூடிய இருவழி விமான பயணக் கட்டணம் (Flight ticket) ஆகிய அனைத்தும் மலேசிய அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும்.
முக்கியப் பாடப்பிரிவுகள்
இந்தக் கல்வித்தொகை முக்கியமாக முதுகலை (Master's Degree) படிப்புகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வழங்கப்படுகிறது. அதன்படி தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT), பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், ஸ்டெம் (STEM) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வேளாண் தொழில்நுட்பம், இஸ்லாமிய நிதி, சட்டம், பொது நிர்வாகம் மற்றும் கொள்கை ஆய்வுகள், நிலையான மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய துறைகளுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும். எனினும், நர்சிங், மருத்துவம் மற்றும் கிளினிக்கல் பார்மசி ஆகிய படிப்புகளுக்கு இக்கல்வித்தொகை பொருந்தாது.
தகுதி வரம்புகள்
விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இளங்கலை படிப்பில் குறைந்தபட்சம் 'செகண்ட் கிளாஸ் அப்பர்' (Second Class Upper Honors) அல்லது 3.0 சிஜிபிஏ (CGPA) மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழித் திறனை நிரூபிக்க ஐஇஎல்டிஎஸ் (IELTS 6.0) அல்லது டோஃபெல் (TOEFL 60) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்; அல்லது ஆங்கில வழியில் இளங்கலை பயின்றதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட முறையான மருத்துவ அறிக்கை (Medical Report) இருக்க வேண்டும். செப்டம்பர்/அக்டோபர் 2026 சேர்க்கைக்கு, தகுதியான மலேசியப் பல்கலைக்கழகத்தில் இருந்து முழுநேர முதுகலை படிப்பிற்கான சேர்க்கை ஆணை (Full Offer Letter) பெற்றிருப்பது அவசியமாகும்.
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் போது தற்போதைய பாஸ்போர்ட் நகல், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள், ஆங்கில மொழித் திறனுக்கான சான்று, சுயவிவரக் குறிப்பு (Curriculum Vitae), எம்டிசிபி (MTCP) இணையதள வடிவத்திலான மருத்துவ அறிக்கை, இரண்டு பரிந்துரைக் கடிதங்கள் (Letters of Recommendation) மற்றும் மலேசியப் பல்கலைக்கழகம் வழங்கிய சேர்க்கை ஆணை ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்
இக்கல்வித்தொகையின் கீழ் மலேசியாவில் உள்ள 20 அரசுப் பல்கலைக்கழகங்கள் (Public Universities) மற்றும் 4 அரசு சார்ந்த பல்கலைக்கழகங்கள் (Government-linked Universities) என மொத்தம் 24 கல்வி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் யுனிவர்சிட்டி மலாயா (UM), யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா (USM), யுனிவர்சிட்டி டெக்னாலஜி பெட்ரோனாஸ் (UTP), மல்டிமீடியா யுனிவர்சிட்டி (MMU) உள்ளிட்ட முன்னணி பல்கலைக்கழகங்கள் அடங்கும். தகுதியுடையவர்கள் https://mtcp.kln.gov.my/scholarship என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!
