சமூக ஊடகங்களால் சிறுவர்களின் மன வளர்ச்சி பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனி புதிய சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்க முடியாது என்ற அதிரடியான புதிய விதியை மலேசிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது.
கண்டிப்பான வயது சரிபார்ப்பு முறை
மலேசிய அரசின் இந்த புதிய உத்தரவின்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட உலகில் உள்ள அனைத்து முன்னணி சமூக ஊடகத் தளங்களையும் பயன்படுத்துவதற்கு முன்பாக பயனர்களின் வயது சரிபார்ப்பு (Age Verification) செய்வது இனி கட்டாயமாக்கப்படுகிறது. 16 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் எக்காரணம் கொண்டும் கணக்குகளை உருவாக்க இந்த விதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்க சட்டதிட்டங்களை மீறிச் செயல்படும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த விதியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, குழந்தைகள் எப்படியாவது பொய் விபரங்களைக் கொடுத்து கணக்குகளை உருவாக்கினால், அவர்களின் பெற்றோருக்குத் தண்டனை வழங்கப்படவும் வாய்ப்புள்ளது.
விலக்கி வைப்பதன் பின்னணியில் உள்ள நோக்கம்
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சமூக ஊடகங்களின் பக்க விளைவுகளிலிருந்து முழுமையாக விலக்கி வைப்பதற்காகவே மலேசிய அரசாங்கம் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளது. இணையத்தில் பரவும் தீங்கு விளைவிக்கும் ஆபாச மற்றும் வன்முறை உள்ளடக்கம், இணையவழி கொடுமைப்படுத்துதல் (Cyberbullying) மற்றும் இணையப் பக்கங்களில் தேவையின்றி அதிகப்படியான பணத்தைச் செலவு செய்யும் பழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதே தங்களின் முதன்மை நோக்கம் என்று அரசு விளக்கியுள்ளது. மேலும், அரசாங்கம் குழந்தைகளை இணைய உலகத்திலிருந்து முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை என்றும், மாறாக அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே விரும்புவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.
நிறுவனங்களுக்குக் கால அவகாசம்
இந்த புதிய விதியின்படி, சமூக ஊடகத் தளங்கள் இனி குழந்தைகளைத் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களிலிருந்து பாதுகாக்கும் பிரத்யேக பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப மாற்றங்களைச் தங்களின் தளங்களில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்குச் சிறிது கால அவகாசமும் மலேசிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் வரிசையில் மலேசியா
சமூக ஊடகங்களில் உள்ள உள்ளடக்கங்களால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மன வளர்ச்சி பல வழிகளில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாதான் குழந்தைகளைச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைக்கும் இந்த அதிரடி முடிவை எடுத்தது. அங்கு, கடந்த 2025 டிசம்பர் 10 முதல், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டதுடன், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஸ்னாப்சாட், டிக்டாக் போன்ற தளங்களில் இருந்த குழந்தைகளின் கணக்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இது தவிர, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவிலும் 16 வயதுக் குழந்தைகளுக்கு இதேபோன்ற கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. பிரான்ஸ் நாடும் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தடை விதிக்க முன்மொழிந்தது. அங்கு நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையும், சிறு மாற்றங்களுடன் மேற்சபையும் இதனை நிறைவேற்றியுள்ள நிலையில், இறுதி ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் எச்சரிக்கை
மலேசியா மற்றும் பிற நாடுகளின் இந்தத் தடை முடிவானது, பாதுகாப்பான செயலிகளை விட்டுவிட்டு குழந்தைகள் வேறு ஆபத்தான இடங்களில் கணக்குகளை உருவாக்க ஊக்குவிக்கக்கூடும் என்று முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா கவலை தெரிவித்துள்ளது. குழந்தைகள் சமூக ஊடகத் தளங்களை முழுமையாகக் கைவிடாமல், அரசாங்கத்தின் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை இல்லாத மூன்றாம்தர வலைத்தளங்களை நாடக்கூடும் என்றும், இது இணையவழி அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைப்பதற்குப் பதிலாக விபரீதமாக அதிகரிக்கக்கூடும் என்றும் மெட்டா நிர்வாகம் எச்சரித்துள்ளது.
Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!
