ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி, அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளால் கொல்லப்பட்ட செய்தி காட்டுத்தீயாய் பரவியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரம் இன்று (மார்ச் 1) போர்க்களமாக மாறியது. அங்குள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், கட்டிடத்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கிச் சூறையாடினர். தூதரகத்தைத் தீக்கிரையாக்கப் போவதாகவும், தங்கள் தலைவரின் மரணத்திற்குப் பழிதீர்க்காமல் விடமாட்டோம் என்றும் ஆக்ரோஷமான முழக்கங்களை எழுப்பினர்.இது தொடர்பான அதிரவைக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தூதரகத்தைப் பாதுகாக்க முயன்ற பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்தது. இந்தத் துயரமான வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கராச்சி காவல் அதிகாரி முகமது ஜவாத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கராச்சி மட்டுமின்றி, பாகிஸ்தானின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் மக்கள் வீதிகளில் இறங்கி அமெரிக்காவிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள முதன்மை அமெரிக்கத் தூதரகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அங்கு ராணுவம் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு வளையத்திற்குள் நகரம் கொண்டுவரப்பட்டுள்ளது.
