ஈரானில் மதவாத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், அந்த நாடு ஒரே இரவில் அழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தச் சூழலில், பாகிஸ்தான் மேற்கொண்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் காரணமாகப் போர்க்களத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இந்தப் போரை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ஈரானும் ஏற்றுக்கொண்ட நிலையில், இதுவரை மௌனம் காத்து வந்த இஸ்ரேல் தற்போது தனது அதிகாரப்பூர்வ ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் நிபந்தனைகள்
அதிபர் ட்ரம்ப்பின் போர் நிறுத்த முடிவை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள இஸ்ரேல், அதே சமயம் சில முக்கிய நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளது. குறிப்பாக, ஈரான் உடனடியாக ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்றும், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. ஈரானின் அணுசக்தித் திட்டம், ஏவுகணை சோதனைகள் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உலக நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பேச்சுவார்த்தைகள் அமைய வேண்டும் என்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது.
நீடிக்கும் தாக்குதல்
இந்த இடைக்காலப் போர் நிறுத்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை இஸ்ரேல் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, லெபனான் மீதான தங்களது ராணுவத் தாக்குதல்கள் இந்தப் போர் நிறுத்தக் காலத்திலும் தொடர்ந்து நடைபெறும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நடைபெறவுள்ள அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் ஆயுதக் கட்டுப்பாடுகள் குறித்து உறுதி அளிக்கப்படும் என அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்காசியாவில் ஓரளவிற்குப் பதற்றம் தணிந்திருந்தாலும், லெபனான் விவகாரத்தில் இன்னும் அமைதி திரும்பவில்லை.
