இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள சூழலில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இஸ்ரேல் தேசம் தற்போது முன்னெப்போதையும் விட வலிமையாக இருப்பதாகவும், எதிரி நாடான ஈரான் பலவீனமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்து மக்கள் காட்டிய மன உறுதிக்குத் தனது நன்றியைத் தெரிவித்த அவர், போரில் உயிர்நீத்த வீரர்களுக்குத் தனது மரியாதையைச் செலுத்தினார். மேலும், இஸ்ரேல் அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் பல இருப்பதாகவும், அவற்றை ஒப்பந்தங்கள் மூலமாகவோ அல்லது தேவைப்பட்டால் மீண்டும் போரைத் தொடர்ந்தோ எட்டிப்பிடிப்போம் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதேவேளையில், பெய்ரூட்டில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளர் நைம் காசிமின் தனிப்பட்ட செயலாளர் அலி யூசுப் ஹர்ஷி கொல்லப்பட்டுள்ளார். காசிமின் அலுவலக நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்த இவர், இஸ்ரேல் படைகளால் குறிவைத்துக் கொல்லப்பட்டிருப்பது ஹிஸ்புல்லா அமைப்பிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதனிடையே, தெற்கு லெபனானில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கையில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்பதை நெதன்யாகுவும், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
