ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன. காமேனியின் மறைவுக்குப் பிறகு ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ஒரு அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் எங்கு ஒளிந்திருந்தாலும் தேடிக் கண்டுபிடித்துப் படுகொலை செய்வது உறுதி என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் முழு ஆதரவுடன் தற்போதைய ஈரான் ஆட்சியை முழுமையாக நசுக்கவும், ஈரானிய மக்கள் இந்த ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய மாற்றத்தை உருவாக்கவும் இஸ்ரேல் ராணுவம் எப்போதும் தயார் நிலையில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், காமேனியின் மகன் மோஜ்டபா ஈரானின் அடுத்த உச்ச தலைவராகப் புரட்சிகரப் படைகளின் அழுத்தத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற தாக்குதலில் காமேனியுடன் சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் உயிரிழந்தனர்; காயமடைந்திருந்த அவரது மனைவியும் தற்போது உயிரிழந்துள்ளார். மறைந்த தலைவர் காமேனியின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெறவுள்ள சூழலில், நாடு முழுவதும் மூன்று நாட்கள் அரசுத் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது நாளை எட்டியுள்ள இந்தப் போரில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு அஞ்சிப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றும், அமெரிக்கா மீது தங்களுக்கு எள்ளளவும் நம்பிக்கை இல்லை என்றும் ஈரான் மூத்த தலைவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இந்தப் போர் இரு நாடுகளின் விருப்பப்படி தொடர்ந்து நீடிக்கும் எனத் தெரிகிறது.
