மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர், இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதியில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (IREF), மத்திய அரசின் ஏபிஇடிஏ (APEDA) அமைப்பிடம் அளித்துள்ள அறிக்கையில், கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் சுமார் 4 லட்சம் டன் பாசுமதி அரிசி பாதியிலேயே தேங்கியிருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளது. இதில் 2 லட்சம் டன் அரிசி இந்தியத் துறைமுகங்களிலும், மீதமுள்ள 2 லட்சம் டன் சர்வதேச கடல் வழிகளிலும் சிக்கியுள்ளன.
வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கான காப்பீட்டுத் தொகை மற்றும் போர்க்கால கூடுதல் கட்டணங்கள் உயர்ந்துள்ளதால், சரக்கு போக்குவரத்து செலவு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மேலும், கப்பல் எரிபொருள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.
இந்தச் சூழலால் கடந்த மூன்று நாட்களில் மட்டும் உள்நாட்டில் பாசுமதி அரிசியின் விலை 10 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. இதனால் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க, துறைமுகங்களில் தேங்கியுள்ள சரக்குகளுக்கான சேமிப்புக் கட்டணங்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், இந்த நெருக்கடியைத் 'தவிர்க்க முடியாத சூழலாக' அறிவித்து அபராதங்களில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பாதியில் நிற்கும் சரக்குகளைத் திருப்பி அனுப்ப சுங்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கி உரிய ஆவண உதவிகளை வழங்க வேண்டும் என்றும், கொரோனா காலத்தில் வழங்கப்பட்டதைப் போல வங்கிகள் கூடுதல் கடன் வசதி மற்றும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். உரிய நேரத்தில் அரசு தலையிட்டு நிவாரணம் வழங்காவிட்டால் இந்தியாவின் சர்வதேச ஏற்றுமதி ஒப்பந்தங்கள் பாதிக்கப்படும் என ஐஆர்இஎப் துணைத் தலைவர் தேவ் கார்க் எச்சரித்துள்ளார்.
