இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருந்த ஈரானின் 'ஐஆர்ஐஎஸ் டேனா' (IRIS Dena) என்ற போர்க்கப்பலை, அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் 'மார்க்-48' ரக டார்பிடோ குண்டு மூலம் தாக்கித் தகர்த்தது. இந்தத் தாக்குதலில் 87 வீரர்கள் உயிரிழந்த நிலையில், மாயமான 60-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை தேடி வருகிறது. ஈரானின் 17 போர்க்கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா உரிமை கோரியுள்ள நிலையில், தனது எல்லைக்கு வெகு தொலைவில் அமைதியாகச் சென்ற கப்பல் மீது அமெரிக்கா அராஜகமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக, வடக்கு பெர்சியன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் அமெரிக்கக் கப்பல் தீப்பற்றி எரிவதாக ஈரான் அறிவித்துள்ளதோடு, ஹார்முஸ் ஜலசந்தி பகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக எச்சரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கத் தாக்குதலில் இருந்து தப்பிக்க மற்றுமொரு ஈரான் கடற்படைக் கப்பல் சுமார் 100 வீரர்களுடன் பாதுகாப்பு வேண்டி இலங்கை கடற்பரப்பை நோக்கித் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச கடல் பகுதியில் இரு நாடுகளும் நேரடியாக மோதிக்கொள்வதால் உலக நாடுகளிடையே பெரும் பதற்றம் நிலவுகிறது.
