மேற்காசிய நாடான ஈரான், இஸ்ரேல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் போது பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஏவுகணையில் “இந்திய மக்களுக்கு நன்றி” (Thanks to Indian People) என எழுதப்பட்டிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த மோதலில் ஈரானைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இக்கட்டான இந்தச் சூழலில், ஈரானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா தொடர்ந்து மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்த மனிதநேய உதவிக்காகத் தனது நன்றியை வெளிப்படுத்தும் விதமாக, ஈரான் ஏவிய 83-ஆவது ஏவுகணையில் “இந்திய மக்களுக்கு நன்றி” என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவுடன் சேர்த்து ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகங்கள் அந்த ஏவுகணைகளில் இடம்பெற்றிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மும்பையில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளின் போது தார்மீக ஆதரவு வழங்கிய இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மக்களுக்கு ஈரான் வான்படை தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த சர்வதேச அரசியல் சூழ்நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கை இந்தியா-ஈரான் இடையேயான ஆழமான உறவை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
