உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் செல்ல ஈரான் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, புஷ்பக் (Pushpak) மற்றும் பரிமல் (Parimal) ஆகிய இரண்டு இந்திய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் அந்த முக்கிய கடல்வழிப் பாதை வழியாகப் பாதுகாப்பாகக் கடந்து சென்று கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் நாட்டு கப்பல்களுக்கு ஈரான் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெயைச் சுமந்து கொண்டு, இந்திய மாலுமியின் தலைமையில் வந்த ஷென்லாங் (Shenlong) என்ற லிபீரியக் கொடி ஏந்திய கப்பலும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்து மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது. அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, அந்தப் பகுதி வழியாக இந்தியா நோக்கிப் பாதுகாப்பாக வந்த முதல் கப்பல் இதுவாகும்.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பாதையில் ஏற்படும் சிறிய தடங்கலும் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலையையும் கடுமையாகப் பாதிக்கும் என்பதால், ஈரானின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
