அமெரிக்காவில் திருமணமான சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் கேரள வம்சாவளி இளைஞர் பலி!

அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் கேரள வம்சாவளி பைலட் டேவ் பிஜி உயிரிழந்தார்; அவரது நர்ஸ் மனைவி காயங்களுடன் உயிர் தப்பினார்.

M

எழுதியவர்

1 மணி நேரத்திற்கு முன்
அமெரிக்காவில் திருமணமான சில மணி நேரத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் கேரள வம்சாவளி இளைஞர் பலி!

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார். டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பைலட்டாகப் பணியாற்றி வந்த 26 வயதான டேவ் பிஜி என்ற அந்த இளைஞரின் குடும்பம் கேரளாவைச் சேர்ந்ததாகும். டவ்சன்வில் பகுதியில் தனது திருமணம் முடிந்த கையோடு, மணமகளுடன் தேனிலவுக்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றபோது, அவர்கள் பயணித்த 'ராபின்சன் ஆர்66' (Robinson R66) ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் ஹெலிகாப்டரை இயக்கிய பைலட்டும் உயிரிழந்துள்ளார்; ஆனால், அவரது பெயர் விபரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர் பிழைத்த மணமகள்

டேவ் பிஜியின் மனைவியான ஜெஸ்னி என்ற இளம் நர்ஸ், இந்த பயங்கர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து, தற்போது அட்லாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்குப் பிறகு ஹெலிகாப்டர் விழுந்த இடத்தை மீட்புக் குழுவினர் கண்டறிய நீண்ட நேரம் ஆகியுள்ளது. அதுவரை சுமார் 6 மணி நேரம் காயங்களுடன் ஹெலிகாப்டர் இடிபாடுகளுக்குள் ஜெஸ்னி சிக்கியிருந்துள்ளார். "அவள் கண் விழித்துப் பார்த்தபோது, டேவ் அவளது மார்பில் சாய்ந்தபடி இருந்துள்ளார். உடல் முழுவதும் ரத்தக் கறையுடன், உடல் முற்றிலும் குளிர்ந்து போயிருந்தது. அவள் ஒரு நர்ஸ் என்பதால், டேவ் இறந்துவிட்டதை அங்கேயே உணர்ந்துவிட்டாள்" என டேவின் தந்தை ஜார்ஜ் பிஜி மிகுந்த சோகத்துடன் தெரிவித்துள்ளார்.

கடைசி நிமிட மகிழ்ச்சியும் காதல் கதையும்

டேவ் பிஜியின் தந்தை ஜார்ஜ் பிஜி ஊடகங்களிடம் பேசுகையில், "என் மகன் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்" என்று உருக்கமாகக் கூறினார். டேவும் ஜெஸ்னியும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நியூ டெஸ்டமென்ட் சர்ச்சில் சந்தித்துக் காதலிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை டவ்சன்வில்லில் உள்ள 'தி ரெவரே' என்ற இடத்தில் இவர்களது திருமணம் சுமார் 400 விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்துள்ளது. திருமண வரவேற்பு முடிந்ததும், அட்லாண்டா நகரில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக, அங்கிருந்து ஜார்ஜியாவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான 'டிகல்ப்-பீச்ட்ரீ' நோக்கி ஹெலிகாப்டரில் புதுமணத் தம்பதியினர் விடைபெற்றுப் புறப்பட்டுள்ளனர். ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே திருமண வேதிக்கு அருகிலுள்ள மவுண்ட் வெர்னான் டிரைவ் என்ற அடர்ந்த காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது.

மோசமான வானிலை குறித்து எச்சரித்த பைலட் மகன்

விபத்துக்கு முன்பு நடந்த அதிர்ச்சிகரமான விபரத்தையும் அவரது தந்தை பகிர்ந்துள்ளார். டெல்டா ஏர்லைன்ஸில் ஃபர்ஸ்ட் ஆபீஸராகப் பணியாற்றிய டேவ் பிஜிக்கு, புறப்படுவதற்கு முன்பே வானிலை குறித்து சந்தேகம் இருந்துள்ளது. பனிமூட்டம் காரணமாகப் பார்வைத் திறன் பூஜ்ஜியமாக (Zero Visibility) இருந்ததால், "இப்படி இருக்கும்போது நாங்கள் ஒருபோதும் விமானத்தை இயக்க மாட்டோம்" என்று ஹெலிகாப்டர் பைலட்டிடம் டேவ் கூறியுள்ளார். ஆனால், அந்த ஹெலிகாப்டர் பைலட்டோ, நாம் இன்னும் சற்று கூடுதல் உயரத்தில் பறக்கலாம் என்று கூறி ஹெலிகாப்டரை இயக்கியதாக ஜார்ஜ் பிஜி தெரிவித்துள்ளார். தற்போது இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Follow us on our official WhatsApp channel for breaking news alerts and updates!

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...