லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்குப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹெஸ்புல்லா அமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், அந்த அமைப்பின் மிக முக்கியமான தளபதியுமான முகமது ராத் கொல்லப்பட்டார். மறைந்த ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவால் பலமுறை தனது தனிப்பட்ட செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட ராத், தெற்கு லெபனானில் எஞ்சியிருந்த முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர்.
ஈரான் உச்ச தலைவர் கொலைக்கு ஹெஸ்புல்லா பதிலடி
ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு இன்று இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியது. "இமாம் செய்யது அலி அல்-ஹுசைனி காமேனியின் தூய ரத்தத்திற்குப் பழிவாங்கவும், லெபனான் மக்களைப் பாதுகாக்கவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது" என ஹெஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளது. இதற்குப் பதிலடியாக, லெபனான் முழுவதும் உள்ள ஹெஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேலிய ராணுவம் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
மீறப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம்
கடந்த 2024 நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லா நடத்தும் முதல் பெரிய அளவிலான தாக்குதல் இதுவாகும். லெபனான் மண்ணிலிருந்து எந்தவொரு ஆயுதக் குழுவும் இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படக் கூடாது என்ற ஒப்பந்த விதிமுறைகள் இந்தத் தாக்குதல்களால் சிதைந்துள்ளன. இன்று அதிகாலை 2:40 மணியளவில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, பெய்ரூட் நகரிலிருந்து மக்கள் தங்கள் வாகனங்களிலும் கால்நடையாகவும் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறி வருகின்றனர். இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
லெபனானிலிருந்து ஏவப்பட்ட சில ஏவுகணைகளை இஸ்ரேல் இடைமறித்து அழித்தாலும், சில ஏவுகணைகள் திறந்தவெளிப் பகுதிகளில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. போர்நிறுத்தத்திற்குப் பிறகும் இஸ்ரேல் அவ்வப்போது லெபனான் மீது தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது இருதரப்பிலும் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
