15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் முடிவை கிரீஸ் அரசு அறிவித்துள்ளது. இந்த தடை 2027 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அந்நாட்டு பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் அறிவித்துள்ளார். குழந்தைகளின் மனநல பாதிப்புகள் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டிக் டாக் , இன்ஸ்டாகிராம் , பேஸ்புக் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடகங்களில் உள்ள தொடர்ச்சியான ஸ்க்ரோலிங் வசதி, குழந்தைகளின் மனநலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக அரசு குறிப்பிட்டுள்ளது. இது அவர்களின் வளர்ச்சியையும், இளமை கால அனுபவங்களையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களில் சமூக ஊடக அடிமைத்தனத்தை கட்டுப்படுத்தி, அவர்களின் மனநலத்தை பாதுகாப்பதே இந்தத் தடையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், ஐரோப்பியன் யூனியன் உறுப்புநாடுகள் முழுவதும் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக பயன்பாட்டில் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் என கிரீஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.
இதேபோல் யுனைடெட் கிங்டம் உள்ளிட்ட சில நாடுகளும் சிறார்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்த சட்டங்களை பரிசீலித்து வருவதால், இந்த விவாதம் உலகளவில் அதிக கவனம் பெறுகிறது.
