ஈரானின் மறைந்த முன்னாள் மன்னர் ஷாவின் மகனும், அந்நாட்டின் நாடு கடத்தப்பட்ட இளவரசருமான ரெசா பஹ்லவி, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் மர்ம நபர் ஒருவரால் தாக்குதலுக்கு உள்ளானார். வியாழக்கிழமை அன்று பெர்லினில் உள்ள ஒரு கட்டிடத்திலிருந்து அவர் வெளியே வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தாக்குதலும் இளவரசரின் எதிர்வினையும்
இளவரசர் ரெசா பஹ்லவி தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் முதுகுப்பையுடன் (Backpack) வந்த நபர் ஒருவர், திடீரென அவர் மீது சிவப்பு நிற திரவத்தை ஊற்றினார். அந்தத் திரவம் தக்காளி சாறு எனக் கருதப்படுகிறது. இளவரசரின் தலை, கழுத்து மற்றும் கோட் ஆகியவற்றில் அந்தச் சிவப்பு திரவம் படிந்த போதிலும், 65 வயதான பஹ்லவி எவ்விதப் பதற்றமும் இன்றி அமைதியாகவே காணப்பட்டார். இதற்கிடையே, பாதுகாப்புப் படையினர் அந்த நபரை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இந்தத் தாக்குதல் காட்சிகள் அங்கிருந்த கேமராவிலும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க - ஈரான் போர்நிறுத்தத்திற்கு கடும் எதிர்ப்பு
தாக்குதலுக்கு முன்னதாக பெர்லினில் செய்தியாளர்களைச் சந்தித்த பஹ்லவி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தார். "ஜனநாயக நாடுகள் ஒரு சில பயங்கரவாதிகளின் கட்டளைக்கு இணங்கிச் செயல்படக் கூடாது. ஈரானியர்களை விடுவிக்க நீங்கள் உதவவில்லை என்றால், எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்புகளை உங்களால் சமாளிக்க முடியாது," என்று அவர் எச்சரித்தார். மேலும், ஈரானில் அரசியல் கைதிகளை விடுவிக்கவும், மரண தண்டனைகளை நிறுத்தவும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் அரசுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இளவரசரின் அரசியல் பின்னணி
1979-ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட புரட்சியின் காரணமாக அவரது தந்தை பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, கடந்த 50 ஆண்டுகளாகப் பஹ்லவி வெளிநாட்டிலேயே வசித்து வருகிறார். தற்போது ஈரானில் நிலவும் மதவாத ஆட்சி வீழ்ச்சியடைந்தால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இதற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவத் தலையீட்டையும் அவர் ஆதரித்து வருகிறார். இருப்பினும், இவ்வளவு காலத்திற்குப் பிறகு ஈரான் மக்களிடையே அவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு உள்ளது என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
