அமெரிக்க நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகள் உலகளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய ஆவணங்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. அமெரிக்க நீதிமன்ற உத்தரவின் பேரில் பொதுவெளியில் வெளியான ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ பல்வேறு நாடுகளைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க நபர்களின் பெயர்களை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது.
எப்ஸ்டீன் விவகாரம்: பின்னணி
அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுடன் தொடர்பு வைத்திருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019ஆம் ஆண்டு சிறுமிகளை பாலியல் சுரண்டலில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டில் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் நியூயார்க் சிறையில் உயிரிழந்த நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டார். இது அதிகாரப்பூர்வமாக தற்கொலை என அறிவிக்கப்பட்டாலும், அவரது மரணம் பல சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது.
மஸ்க் மற்றும் ஜுக்கர்பெர்க் பெயர்கள் பேசுபொருள்
புதிய ஆவணத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஒரு புகைப்படம், 2008ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னரும் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆடம்பர விருந்தில் எப்ஸ்டீன் கலந்து கொண்டதாகவும், அதே நிகழ்வில் தொழில்நுட்ப உலகின் முக்கிய நபர்களான எலன் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் புகைப்படம் 2015ஆம் ஆண்டு மின்னஞ்சல் மூலம் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்பிருந்த மறுப்புகள் மீண்டும் கவனம்
இதற்கு முன்பு, எப்ஸ்டீன் நடத்திய எந்த விருந்துகளிலும் தாம் கலந்து கொள்ளவில்லை என்று எலன் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் புதிய ஆவணங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் மின்னஞ்சல் பதிவுகள் குறித்து தற்போது மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. அதே நேரத்தில், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் மஸ்க் முன்பே வெளிப்படுத்தியிருந்தார்.
பல்வேறு நபர்கள் மீது சர்ச்சை
எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் பல முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், சிலர் இதனை மறுத்தும் விளக்கம் அளித்தும் வருகின்றனர். இதற்கு முன் வெளியான ஆவணங்களில் பிரிட்டிஷ் அரச குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் இடம்பெற்றதாக கூறப்பட்டதால், அவர்களிடமிருந்தும் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியானது.
தொடரும் உலகளாவிய விவாதம்
புதிய ஆவணங்கள் வெளியாகியுள்ள நிலையில், எப்ஸ்டீன் தொடர்பான விவகாரம் மீண்டும் சர்வதேச அளவில் விவாதத்துக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதில் இடம்பெறும் தகவல்கள் குறித்து மேலதிக விசாரணைகள் மற்றும் அரசியல், சமூக விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
