அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், மேற்காசியப் பகுதியில் போர் மேகங்கள் இன்னும் விலகவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித நிபந்தனையுமின்றித் திறக்க வேண்டும் என்றும், அணு ஆயுதத் திட்டங்களை ஈரான் கைவிட வேண்டும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், இதற்குப் பதிலடியாக ஈரான் சில கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. ஈரான் மற்றும் லெபனான் மீது இனி போர் தொடுக்கப்படாது என அமெரிக்கா முறையான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அணுசக்தி விவகாரங்கள் குறித்துப் பேச முடியும் என அந்த நாடு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப்பின் அதிரடி ஆலோசனையும் எச்சரிக்கையும்
ஈரானின் இந்த நிபந்தனைகள் குறித்து வெள்ளை மாளிகை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் தனது உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, தனது 'ட்ரூத்' சமூக ஊடகப் பக்கத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் ஆக்ரோஷமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். குண்டுகள் வெடிக்கும் பின்னணியில், கையில் நவீன துப்பாக்கியை ஏந்தியபடி திரைப்படப் பாணியில் காட்சியளிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், "இனியும் என்னால் நல்லவனாக இருக்க முடியாது" என ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்
ஈரான் விரைவில் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ட்ரம்ப், அந்த நாடு அணு ஆயுதத்தைப் பெற்றால் ஒட்டுமொத்த உலகமே பணயக்கைதிகளாக மாறும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தற்போது பொருளாதார ரீதியாகச் சரிந்து வருவதாகவும், அணுசக்திப் பிரச்சினையில் நேரடித் தீர்வு காணப்படாவிட்டால் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என்றும் அவர் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார். அணு ஆயுதமற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தெரியாமல் ஈரான் தடுமாறுவதாகக் கூறியுள்ள ட்ரம்ப், ஈரானின் ஒருங்கிணைப்பற்ற செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
