உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ள நிலையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது "ட்ரூத் சோஷியல்" தளத்தில் ஈரானுக்குப் புதிய காலக்கெடுவை நிர்ணயித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக திங்கட்கிழமை வரை அளிக்கப்பட்டிருந்த அவகாசத்தை நீட்டித்துள்ள அவர், "செவ்வாய்க்கிழமை இரவு 8:00 மணி!" என்று பதிவிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்குள் ஜலசந்தி திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் ஒட்டுமொத்த உள்கட்டமைப்புகளும் தகர்க்கப்படும் என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் அச்சுறுத்தல்
ஈரான் தனது பிடிவாதத்தைக் கைவிடாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். "பைத்தியக்காரர்களே, ஹோர்முஸ் ஜலசந்தியை உடனே திறங்கள்; இல்லையென்றால் நீங்கள் நரகத்தை அனுபவிப்பீர்கள்" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று ஈரானில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஒரே நேரத்தில் குறிவைக்கப்படும் என்பதையும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த நேரடித் தாக்குதல் மிரட்டல் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதுடன், உலகப் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ஈரான் தரப்பு பதிலடி
டிரம்ப்பின் இந்த அச்சுறுத்தல்களுக்கு ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது-பாக்ர் காலிபாஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உத்தரவுகளுக்கு இணங்க டிரம்ப் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களால் ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியமும் பற்றி எரியும் என எச்சரித்துள்ளார். "உங்கள் போர்க்குற்றங்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை; அமெரிக்காவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நரகமாக நீங்கள் மாற்றி வருகிறீர்கள்" என்று காலிபாஃப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே சமரச அறிகுறிகள் தென்படாததால், போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.
