மலேசியாவின் கெடா மாநிலம், ஜித்ரா (Jitra) அருகேயுள்ள தாமான் மசூரி (Taman Mahsuri Phase 2C) குடியிருப்பு பகுதியில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி முதல் இதுவரை 63 பேருக்குச் சிக்கன்குன்யா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை மற்றும் தடுப்புப் பணிகள்
இது குறித்து மாநில வீட்டுவசதி, உள்ளாட்சி மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் மன்சூர் ஜக்காரியா கூறுகையில், இந்த பாதிப்பினால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த குபாங் பாசு (Kubang Pasu) சுகாதார அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது
நகராட்சி மன்றம், கழிவு மேலாண்மை நிறுவனம் (SWCorp) மற்றும் உள்ளூர் குடியிருப்பாளர்களுடன் இணைந்து அப்பகுதியில் மெகா தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி 7 முதல் 15-ஆம் தேதி வரை அந்த குடியிருப்பு பகுதியில் 'சிக்கன்குன்யா எதிர்ப்பு நடவடிக்கை' மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்:
கொசுக்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் பாதிப்பு, கடுமையான காய்ச்சல் மற்றும் மூட்டு வலியை உண்டாக்கும். சில நேரங்களில் இது உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுகளைச் சரியாக அப்புறப்படுத்தி, தண்ணீர்தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அல்லது மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
"குடியிருப்பு பகுதிகளில் நோய் மேலும் பரவாமல் தடுக்க தூய்மைப் பணிகளே முதன்மையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்று மன்சூர் ஜக்காரியா வலியுறுத்தியுள்ளார்.
