மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் நாட்டு மக்களுக்குச் சிறப்பு உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், போரின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார அதிர்வுகள் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கும் என்றும், தற்போதைய சூழலில் நம்பிக்கையுடன் இருப்பது சவாலானது என்றும் குறிப்பிட்டார். எரிபொருள் விநியோகத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க, பொதுமக்கள் தங்கள் சொந்த வாகனங்களைத் தவிர்த்து பேருந்து, ரயில் மற்றும் டிராம் போன்ற பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தல்
வரவிருக்கும் ஈஸ்டர் விடுமுறைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாங்கிச் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார். அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுபவர்கள் மற்றும் கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வழக்கமாகப் பயன்படுத்துவது போலவே எரிபொருளைப் பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார். ஆஸ்திரேலியா தனது எரிபொருள் தேவையில் 90 சதவீதத்தை இறக்குமதி செய்வதால், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு அந்நாட்டு மக்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக அவர் கவலை தெரிவித்தார். வரும் மாதங்கள் கடினமாக இருந்தாலும், நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என அவர் உறுதியளித்தார்.
