மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த போர்ப்பதற்றம், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவும் கைகோர்த்து ஈரானின் முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரானில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் வெடிகுண்டுகளை வீசி வருகின்றன.
இந்தக் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்டத் தலைவர்களின் இருப்பிடங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஈரானின் அணு ஆயுத பலத்தையும், பிராந்திய ஆதிக்கத்தையும் தகர்ப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்நாட்டுப் போராட்டங்களால் கொந்தளிப்பில் இருக்கும் ஈரானுக்கு, தற்போது வெளிநாட்டு ராணுவ நடவடிக்கை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் போர்ச் சூழல், சர்வதேச பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சியையும், கச்சா எண்ணெய் விலையில் வரலாறு காணாத உயர்வையும் ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
