சிங்கப்பூர் எல்லைகளில் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாக, கடந்த 2024-ஆம் ஆண்டை விட 2025-இல் 38 சதவீதம் கூடுதலாக, அதாவது 45,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அந்நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கி வேலை செய்ய முயன்றவர்கள் அல்லது குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிநவீன அங்க அடையாளச் சோதனைகள் (Biometric Checks) மூலம் இவர்களை அதிகாரிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.
பிடிபட்ட இந்தியர்கள்!
குற்றம் புரிந்துவிட்டுத் தண்டனைக்கு பயந்து, தனது அடையாளத்தை மறைத்து வேறொரு பெயரில் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 223-ஆக பதிவாகியுள்ளது. இத்தகைய நபர்களுக்கு இனி சிங்கப்பூர் வர நிரந்தரத் தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அதே சமயம், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நுழைய முயன்றவர்களின் எண்ணிக்கை 61-லிருந்து 37-ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவைச் சேர்ந்த இருவர், மனிதவள அமைச்சகத்தின் போலி வேலை அனுமதி கடிதங்களுடன் வந்து பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அதிகரிப்பு
சிங்கப்பூர் சோதனைச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு முறைகளே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணம் என குடிநுழைவு ஆணையம் தெரிவித்துள்ளது. போலி ஆவணங்களை வைத்திருப்பவர்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்பவர்களை உடனுக்குடன் அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேவையற்ற நபர்களின் வருகை தடுக்கப்பட்டு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக ஆணையம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது
