ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது இளம் மற்போர் (Wrestling) சாம்பியன் உட்பட மூன்று பேருக்குப் பொது இடத்தில் வைத்துத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் கோம் (Qom) நகரில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அரசு ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அரசின் இந்த அதிரடி நடவடிக்கை, அங்குள்ள போராட்டக்காரர்களை ஒடுக்கும் ஒரு கடுமையான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
யார் அந்த மூவர்?
வளர்ந்து வரும் மற்போர் வீரரான சலே முகமதி (Saleh Mohammadi), சயீத் தாவுதி மற்றும் மெஹ்தி காசெமி ஆகிய மூவரே தூக்கிலிடப்பட்டவர்கள். கடந்த ஜனவரி 8, 2026 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது, இரண்டு காவல்துறையினரைக் கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2025 டிசம்பர் மற்றும் 2026 ஜனவரியில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற எழுச்சிப் போராட்டங்கள் தொடர்பாகத் தூக்கிலிடப்பட்ட முதல் நபர்கள் இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமை அமைப்புகளின் கண்டனம்
"இந்தத் தூக்குத்தண்டனைகள் முறையான விசாரணை இன்றி, சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று ஈரான் மனித உரிமைகள் அமைப்பு (IHRNGO) கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஒரு திட்டமிட்ட 'அரசுப் படுகொலை' என்றும், மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கிப் போராட்டங்களை ஒடுக்கவே ஈரான் அரசு இவ்வாறு செயல்படுவதாகவும் அந்த அமைப்பின் இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகாதம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் எழுந்த எதிர்ப்பு
சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International), இந்த மூவருக்கும் தற்காப்புக்காக வாதாடக் கூடச் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், இது ஒரு போலியான விசாரணை என்றும் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு நவீத் அப்காரி என்ற மற்போர் வீரர் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தைப் போலவே இதுவும் இருப்பதாகப் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். விளையாட்டு வீரர்களைக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் சமூகத்தைத் அச்சுறுத்த ஈரான் முயல்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் சாடுகின்றனர்.
தற்போது ஈரானில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் இன்னும் பலருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.
