தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் சென்னை துறைமுகம் பகுதியில் பிரம்மாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆந்திர முன்னாள் அமைச்சரும், பிரபல நடிகையுமான ரோஜா, தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ஆந்திர அரசியலையும் தமிழக நிர்வாகத்தையும் ஒப்பிட்டு அவர் வெளியிட்ட கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
வாக்குறுதியும் செயல்பாடும்
விழாவில் பேசிய ரோஜா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை எனக் கடுமையாகச் சாடினார். ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்போவதாகக் கூறி இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். ஆனால், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்னபடியே, குடும்பத் தலைவிகளின் வங்கிச் கணக்கிற்கு மாதம் 1,000 ரூபாய் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்துள்ளார் என்று பாராட்டு தெரிவித்தார். ஒரு தலைவர் சொன்னதைச் செய்வதே உண்மையான ஆளுமைக்கு அழகு என்று அவர் குறிப்பிட்டார்.
ஆயிரம் ரூபாயின் மதிப்பு
நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவள் என்ற முறையில், ஆயிரம் ரூபாயின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும் என்று உணர்ச்சிகரமாகப் பேசிய ரோஜா, இந்தப் பணம் பெண்கள் தங்கள் கணவரையோ அல்லது மகனையோ எதிர்பார்க்காமல் சுயமரியாதையுடன் வாழ உதவுகிறது என்றார். கார்ப்பரேட் நிறுவனங்களின் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களைத் தள்ளுபடி செய்யும்போது வராத எதிர்ப்பு, ஏழைப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும்போது மட்டும் 'சோம்பேறி ஆக்குகிறார்கள்' என்று விமர்சனமாக எழுவது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், தேர்தல் நேரத்தில் இந்தப் பணத்தை நிறுத்த நினைத்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், மொத்தமாக 5,000 ரூபாய் வழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும், அடுத்ததாக இந்தத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது சமூக மாற்றத்திற்குப் பெரிய அளவில் உதவும் என்றும் ரோஜா தனது உரையில் குறிப்பிட்டார்.
