தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம் – பலத்த பாதுகாப்புடன் விரிவான ஏற்பாடுகள்

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை (மே 4) காலை தொடங்க உள்ளன.

1 மணி நேரத்திற்கு முன்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை தொடக்கம் – பலத்த பாதுகாப்புடன் விரிவான ஏற்பாடுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 23 ம் தேதி நடைபெற்றது. மின்னணு இயந்திரம் மற்றும் தபால் முறையில் நடைபெற்ற இந்த வாக்கு பதிவுக்கான, வாக்கு எண்ணிக்கை நாளை (மே -4) நடைபெறவுள்ளது

மாநிலம் முழுவதும் 62 மையங்களில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில், 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

இந்த வாக்கு எண்ணிக்கைக்காக மொத்தம் 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 3,324 மேஜைகள் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்கு எண்ணும் பணிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இணைந்து செயல்படுகின்றனர். இதற்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், செயல்முறையின் வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியுக்கும் ஒருவராக மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு மேசை என்ற அடிப்படையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 1,135 கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மையங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனுமதியற்ற நபர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், முதல் முறையாக க்யூஆர் கோடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அட்டைகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே மையங்களுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.

மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 20,000 காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய நகரங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை முன்னேற்றங்கள் ஒவ்வொரு சுற்று வாரியாக சம்பந்தப்பட்ட மையங்களில் அறிவிக்கப்படுவதுடன், இணையதளம் மற்றும் மொபைல் செயலிகள் மூலமாகவும் உடனுக்குடன் வெளியிடப்படும். இதற்காக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ள, 'இ.சி.ஐ. நெட்' மொபைல் செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டுடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பிற்பகலுக்குள் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து

கருத்துகள் (0)

ஏற்றுகிறது...

இந்த கட்டுரையை பற்றி உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்:

உலகளாவிய வானிலை & உள்ளூர் தகவல்

இந்திய திருவிழாக்கள்

நம்மைப் பின்தொடருங்கள்

Loading ads...