மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா, நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சி, அதிமுக தொண்டர் ஒருவரால் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாகும். எம்.ஜி.ஆர் அவர்கள் ஒரு தொண்டர் தொடங்கிய கட்சியில் இணைந்ததை முன் உதாரணமாகக் கொண்டு, தாமும் இந்த முடிவை எடுத்துள்ளதாக சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கமுதியில் நடைபெற்ற நிகழ்வில், அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பொறித்த முவர்ணக் கொடியை அவர் அறிமுகப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது கட்சியின் சின்னமாக ‘தென்னந்தோப்பு’ சின்னத்தை அவர் அறிமுகம் செய்துள்ளார். தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழிக்கேற்ப, தங்கள் இயக்கம் ஒரு வலிமையான தோப்பாகச் செயல்படும் என்பதைக் குறிக்கவே இந்தச் சின்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, மீண்டும் அக்கட்சியில் இணைய அவர் மேற்கொண்ட முயற்சிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பால் நிராகரிக்கப்பட்டன. இந்தச் சூழலில், தனது அரசியல் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் புதிய பாதையை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, போயஸ் கார்டன் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சசிகலாவின் இந்த அதிரடி வருகை தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.