தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, சுமார் 4,900 நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, திமுகவின் வலுவான தளமாகக் கருதப்படும் டெல்டா பகுதிகளில் தனது அரசியல் அடித்தளத்தை ஆழமாகப் பதிக்கும் நோக்கில் இந்தச் சந்திப்பை விஜய் அமைத்திருந்தார். கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திராவிட முன்னேற்றக் கழகத்தை அவர் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக மீதான நேரடித் தாக்குல்
மேடையில் உரையாற்றிய விஜய், "திமுக ஒரு தீய சக்தி" என்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பாணியில் முழக்கமிட்டார். தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது சாத்தியமே இல்லை என்றும், அக்கட்சியின் கடந்த கால வரலாறு அதைத்தான் உணர்த்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனது அரசியல் வருகையைக் கண்டு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே அச்சத்தில் இருப்பதாகவும், "விஜய் வந்தால் தங்களது அரசியல் பிழைப்பு போய்விடும்" என்ற பயம் அவர்களிடம் குடி கொண்டுள்ளதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
மீனவர் நலன் மற்றும் போலிப் புகழ்ச்சி குறித்த விமர்சனம்
தமிழக மீனவர்கள் சந்திக்கும் துயரங்கள் குறித்துப் பேசிய விஜய், வெறும் கடிதங்கள் எழுதுவதாலோ அல்லது மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதாலோ தீர்வு கிடைக்காது என்றார். "மானே, தேனே, பொன்மானே" என்று உருக்கமாகக் கடிதம் எழுதும் நாடகங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்காது என்று சாடிய அவர், தவெக ஆட்சியில் மீனவர்களுக்கு உறுதியான பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி தந்தார்.
மேலும், "எனக்கு விவசாயம் பற்றி முழுமையாகத் தெரியாது" என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அவர், "நானும் டெல்டா மண்ணின் மகன்" என்று கூறி மக்களை ஏமாற்றும் போலியான அரசியலைத் தான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என முதல்வர் ஸ்டாலினைச் சாடினார்.
மணல் மாஃபியா மற்றும் பொருளாதார எச்சரிக்கை
தமிழகத்தில் தடையின்றி நடைபெறும் மணல் கொள்ளை மற்றும் மணல் மாஃபியாக்களுக்கு திமுக அரசுதான் முழுமையான ஆதரவை வழங்குகிறது என்று விஜய் கேள்வி எழுப்பினார். இந்த ஊழல்களையும், இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும் முதல்வர் ஸ்டாலினால் மறுக்க முடியுமா என்று சவால் விடுத்தார்.
இதே நிலை நீடித்தால், தமிழகம் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்றும், மக்களை ஏமாளிகளாக நினைக்கும் அரசியல் இனி செல்லுபடியாகாது என்றும் அவர் தனது உரையில் எச்சரித்தார்.
