தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையேயான குடும்பநல வழக்கு ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2025 டிசம்பர் 24 அன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் சங்கீதா தொடர்ந்த இந்த விவாகரத்து மற்றும் நிரந்தர ஜீவனாம்சம் கோரும் மனு, அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
நீதிமன்றத்தின் அடுத்தடுத்த நகர்வுகள்
முன்னதாக பிப்ரவரி 26ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போதும் இந்த வழக்கு மேலும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொடர் தாமதங்களுக்குப் பிறகு, தற்போது இந்த விவாகரத்து மனு மீண்டும் நீதிமன்றத்தில் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
ஆன்லைன் மூலம் ஆஜராகும் விஜய்?
இன்றைய விசாரணையின் போது நடிகர் விஜய் நேரில் ஆஜராவதற்குப் பதிலாக, காணொலி காட்சி (ஆன்லைன்) மூலமாக கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில் இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும், தம்பதியினருக்கு இடையே சமரசம் ஏற்படுமா அல்லது வழக்கு தீவிரமடையுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்களிடையேயும் அரசியல் தொண்டர்களிடையேயும் எழுந்துள்ளது.
