தனக்கு தொகுதியில் நெருக்கடி கொடுக்கப்படுவது பற்றி முதலமைச்சர் விஜய்யிடம் சொன்ன உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆர்.கே.நகர் எம்.எல். ஏ., பல்லவி தெரிவித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு பல்லவி வெற்றி பெற்றிருந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பல்லவியின் வெற்றி பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் செய்த சிறப்பான சம்பவம் பற்றி பேசியுள்ளார்.
அதாவது, நான் எம்.எல். ஏ.,வாக பொறுப்பேற்ற பிறகு மகப்பேறு விடுப்பு தொடர்பாக விஜயை சந்தித்தேன். அப்போது என்னிடம் ஆர்.கே.நகர் தொகுதி நிலவரம் பற்றி கேட்டார். அதற்கு, நாம் ஆட்சிக்கு வந்த பிறகும் அங்கிருக்கும் அதிகாரிகள் எதிர்க்கட்சி சப்போர்ட்டில் செயல்படுகிறார்கள். அங்கு எதிர்க்கட்சி ஆளுமை இருக்கிறது. எனக்கும் கடுமையான நெருக்கடி தரப்படுகிறது என சொன்னேன்.
அவ்வளவு தான். நான் பேசிவிட்டு தலைமை செயலகம் வாயிலை விட்டுக் கூட வெளியே வரவில்லை. அதற்குள் எனக்கு உளவுப்பிரிவில் இருந்து போன் வந்தது. நான் முதல்வரிடம் சொன்ன விஷயம் பற்றி கேட்டார்கள். அன்று மாலை மாநகராட்சி அதிகாரி ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் தவெகவில் இருந்து லெட்டர் பேடு கொடுத்தால் எதற்கும் அங்கிருக்கும் காவல் நிலையத்தில் அனுமதி கொடுக்காத சூழல் இருந்தது. கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது.
வெளிப்படையாகவே உங்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என தெரிவிப்பார். அப்படியே அனுமதி கொடுத்தாலும் நிறைய நிபந்தனை சொல்வார்கள். அந்த காவல் நிலைய ஆய்வாளர் பற்றி முதல்வரிடம் சொன்னேன். அதிலிருந்து 2 நாட்களில் அந்த இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இப்படி ஒவ்வொரு புகார் மீதும் முதலமைச்சர் விஜய் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதன் பின்னர் எல்லாருடைய வாழ்க்கையிலும் மாற்றம் உண்டாகும். தமிழ்நாடு வேறு தளத்திற்கு செல்லும். அதேபோல் என்னை நம்பும் என் தொகுதி மக்களுக்கு நான் உண்மையாக இருப்பேன்" எனவும் பல்லவி கூறியுள்ளார்.
