தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூர் மாவட்டம், அகரஞ்சேரியில் இன்று (பிப்ரவரி 23, திங்கள்கிழமை) மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது. கடந்த 20 நாட்களாக இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளைத் த.வெ.க. தொண்டர்கள் மேற்கொண்டு வந்தனர். தொடக்கத்தில் 'மக்கள் சந்திப்பு' என்ற பெயரில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி, காவல்துறையின் கடும் நிபந்தனைகள் மற்றும் சேலம் கூட்ட நெரிசல் சம்பவங்களைக் கருத்தில்கொண்டு, தற்போது 4,900 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்கும் சந்திப்பாக மாற்றப்பட்டுள்ளது.
கியூ ஆர் கோடு முதல் நிழற்பந்தல் வரை: நவீன ஏற்பாடுகள்!
காவல்துறையின் 20-க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளின்படி, 170 அடி நீளம் மற்றும் 140 அடி அகலத்தில் பிரம்மாண்டமான நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்குச் சென்னையில் இருந்து 'கியூ ஆர் கோடு' (QR Code) அடங்கிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டுமே விழா நடைபெறும் 30 ஏக்கர் பரப்பளவிலான திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மற்றும் இருக்கை அமைப்புகளுடன் இந்த மைதானம் தயார் நிலையில் உள்ளது.
சாலை மார்க்கமாக வேலூர் பயணம்: பலத்த பாதுகாப்பு!
இந்தச் சந்திப்பிற்காகத் தலைவர் விஜய் தனது சென்னை இல்லத்திலிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக வேலூருக்குப் புறப்பட்டுள்ளார். காஞ்சிபுரம், ராணிப்பேட்டை வழியாக சுமார் 140 கிலோமீட்டர் பயணம் செய்யும் அவர், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கத் திட்டமிடப்பட்ட மாற்று வழியான கொல்லமங்கலம் அல்லது விநாயகபுரம் வழியாக நிகழ்ச்சி மேடைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணிப்பேட்டை எல்லை முதல் விழா மேடை வரை சுமார் 900 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தாலும், விஜய் தனது வாகனத்தின் மேல் நின்றபடி நிர்வாகிகளிடையே எழுச்ச உரையாற்ற உள்ளார்.
