வேலூர் மாவட்டம் அகரஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், இன்றைய அரசியல் சூழலை ஒரு சுவாரசியமான கதை மூலம் விளக்கினார். யாருமே அடக்க முடியாத ஒரு முரட்டு காளையை, ஒரு சிறுவன் வெறும் புல்லுக்கட்டை காட்டி எளிதாக பணிய வைத்த கதையைச் சொன்ன விஜய், தமிழ்நாடு தேர்தல் களம் என்பது அந்த முரட்டு காளையைப் போன்றது என்றும், அதன் தன்மையைச் சரியாகப் புரிந்து கொண்டால் யார் வேண்டுமானாலும் அதை வெல்ல முடியும் என்றும் பேசினார். அரசியலுக்குப் புதிதாக வந்த தவெக-விற்கு அந்த வித்தை நன்றாகத் தெரியும் என்றும், மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களோடு நிற்பதே தங்களின் அனுபவம் என்றும் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
திமுக மீது மீண்டும் தாக்குதல்
வழக்கம் போலவே இந்த மேடையிலும் திமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை விஜய் முன்வைத்தார். திமுகவை ஒரு ஊழல் கட்சி என விமர்சித்த அவர், வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கும் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாகப் பதிவு செய்தார். "என் வாக்கு, என் உரிமை" என்ற உறுதிமொழியுடன் தனது உரையைத் தொடங்கிய அவர், வரும் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையைத் தொண்டர்கள் மத்தியில் விதைத்தார். வேலூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டப் பிரச்சனைகள் குறித்தும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
கட்டுப்பாடுகளைத் தகர்த்த தொண்டர்கள்
இந்தச் சந்திப்பிற்காக சுமார் 4,900 நிர்வாகிகளுக்கு 'கியூ ஆர் கோடு' (QR Code) மூலம் நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், உற்சாக மிகுதியால் அடையாள அட்டை இல்லாத பல தொண்டர்களும் வாகன நிறுத்தம் வழியாக நிகழ்ச்சித் திடலுக்குள் நுழைந்தனர். கட்சித் தலைமை அறிவுறுத்தியும் கேட்காமல், பல கிலோமீட்டர் தூரத்திற்கு விஜய்யின் காரைத் தொண்டர்கள் பின்தொடர்ந்து வந்தனர். மதியம் 12 மணியளவில் விழா மேடைக்கு வந்த விஜய்யைக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். தனது பிரச்சார வாகனத்தின் மேல் நின்றபடி விஜய் ஆற்றிய உரை, வேலூர் மண்டலத் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
