நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் நாடாளுமன்றம் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
மாநிலங்களவை எம்பி டூ எம்.எல்.ஏ.,
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சி அமைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் முன்னாள் மாநிலங்களவை எம்.பி., சி.வி.சண்முகம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோற்ற சி.வி.சண்முகம் இந்த முறை மயிலம் தொகுதிக்கு மாறி வெற்றி பெற்றுள்ளார்.
அதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் வாய்ப்பு அமைந்தது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சி.வி சண்முகத்திற்கு அளித்தார். அவரும் மாநிலங்களவை எம்.பி.,யாக பதவி ஏற்று கொண்டார். இதனிடையே சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானதால் மாநிலங்களவை எம்.பி., பதவியை அவர் ராஜினாமா செய்தார். இந்த சூழலில் வரும் ஜூன் 18ஆம் தேதி காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்.பி., பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
மாநிலங்களவை செல்லும் தவெக
பொதுவாக மக்களவை, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் போன்றவற்றில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வது போல அல்லாமல் மாநிலங்களவை உறுப்பினரை ஒவ்வொரு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்கின்றனர். சட்டமன்றத்தில் உள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சிகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள தமிழ்நாட்டின் ஒரு மாநிலங்களவை எம்.பி.,பதவி தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அரியணையில் ஏறியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டிருப்பதால் தவெகவுக்கு இம்முறை வாய்ப்பு இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதே சமயம் முதலமைச்சர் விஜயிடம் இந்த மாநிலங்களவை பதவியை கேட்டு பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியும் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த காலியாக உள்ள மாநிலங்களவை பதவி அதிமுக தரப்பினது என்பதால் விஜய் அதனை ஏற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே சி.வி.சண்முகம் தலைமையிலான குறிப்பிட்ட அதிமுக எம்எல்ஏ.,க்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் அதே அதிமுகவிலிருந்து தான் மாநிலங்களவை செல்வதற்கு ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் பட்சத்தில் அதனை விஜய் பயன்படுத்துவாரா அல்லது நிராகரிப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
