ஆளுநர் ஆர்.என்.ரவி
முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எளிமை மற்றும் அர்ப்பணிப்புடன் பொது சேவைக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது மறைவு யாராலும் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
ஜெயலலிதாவின் அன்பைப் பெற்றவர்; அனைவரிடமும் பாசத்தோடு பழகக்கூடியவர். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடி வெற்றி கண்ட இவரின் இழப்பு தொழிலாளர்களுக்குப் பேரிழப்பு.
டி.ராஜா (இந்திய கம்யூ. தேசிய பொதுச் செயலாளர்)
கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய நாளிலேயே பிறந்து வளர்ந்த ஒரு மிகப்பெரிய போராளி மற்றும் புரட்சியாளர். சுய நலன்களைப் பாராமல் நாட்டு நலனுக்காக அயராது பாடுபட்டவர். அவரின் மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குப் பேரிழப்பாகும்.
செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்)
சுதந்திரப் போராட்ட வீரரான நல்லகண்ணு அவர்களுக்கு மத்திய அரசு 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவிக்க வேண்டும். அவரது தியாகம் போற்றுதலுக்குரியது.
நயினார் நாகேந்திரன் (பாஜக மாநில தலைவர்)
அரசு எப்போதெல்லாம் நிதி கொடுக்கிறதோ, அதை மீண்டும் அரசுக்கே திருப்பித் தந்த உன்னதமான மனிதர். அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் பேரிழப்பு.
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)
தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்காகவும், உழைக்கும் வர்க்கத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த ஒரு தியாகச்சுடர். அவருக்கு மதிமுக சார்பில் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்)
எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லாத ஒரு தூய்மையான மக்கள் தலைவர். அவரது இழப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.
திருமாவளவன் (விசிக தலைவர்)
நல்லகண்ணு அவர்களின் மறைவால் தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டிருக்கிற வெற்றிடத்தை இனி வரும் காலத்தாலும் நிரப்ப முடியாது.
விஜய் (தவெக தலைவர்)
ஐயா நல்லகண்ணுவின் இழப்பு, இந்த நாட்டுக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.
சீமான் (நாதக ஒருங்கிணைப்பாளர்)
மண்ணுக்கும் மக்களுக்கும் அரும்பாடாற்றிய ஒரு மாபெரும் தலைவரை, மகத்தான மாமனிதரை இன்று இந்த நாடு இழந்திருக்கிறது.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்)
தூய்மையான அரசியலிலும் மக்கள் சேவையிலும் சிறந்து விளங்கியவர். அவரது மறைவு இந்திய அரசியலுக்கே ஒரு பேரிழப்பு.
