எளிமைக்கும் பொதுநலத்திற்கும் அடையாளமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு (வயது 101), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இடையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. இந்தச் செய்தி ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆழமான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடைசி மூச்சு வரை சமூகத்திற்காகக் களம் கண்டவர்
1925-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லகண்ணு, தனது 18-வது வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, ஒடுக்கப்பட்ட மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாகச் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், பொதுத் தளங்களில் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தவறி விழுந்து காயமடைந்ததில் இருந்தே அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார். அவரது இறுதி நாட்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் வரை அனைவரும் நேரில் சென்றும் தொலைபேசி வாயிலாகவும் நலம் விசாரித்து வந்தனர்.
தமிழகமே கண்ணீரில் அஞ்சலி
நல்லகண்ணுவின் மறைவு ஒரு கட்சியின் இழப்பு மட்டுமல்ல, தமிழகத்தின் பொதுவாழ்வில் நிலவிய ஒரு நேர்மையான சகாப்தத்தின் முடிவு என அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எளிய வாழ்க்கையையும், சமரசமற்ற சமூக நீதிப் போராட்டங்களையும் தாரக மந்திரமாகக் கொண்டிருந்த அவர், தனது ஒரு நூற்றாண்டு காலப் பயணத்தை இன்று நிறைவு செய்துள்ளார். அவரது மறைவையொட்டி கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களும் 'தோழருக்கு' கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
