தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு திருச்சி ஆலம்பட்டி புதூரில் நேற்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி சீமான் அதிரடி காட்டினார். குறிப்பாக, பாலின சமத்துவத்தைப் பேணும் வகையில் 117 இடங்களை ஆண்களுக்கும், 117 இடங்களை பெண்களுக்கும் வழங்கி அரசியல் வட்டாரங்களை வியக்கவைத்துள்ளார். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியிலும், திரைப்பட இயக்குனர் களஞ்சியம் ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
பாஜகவில் இருந்து நாம் தமிழர் வரை
இந்த வேட்பாளர் பட்டியலில் மிகவும் உற்று நோக்கப்பட்ட பெயராக வித்யாராணி வீரப்பன் உருவெடுத்துள்ளார். வழக்கறிஞரான இவர், தனது ஆரம்பகால அரசியல் பயணத்தைப் பாட்டாளி மக்கள் கட்சியில் தொடங்கினார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, அக்கட்சியின் மாநில ஓபிசி அணி துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். எனினும், கொள்கை ரீதியான மாறுபாடுகள் காரணமாக பாஜகவிலிருந்து விலகிய அவர், சீமானின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். தற்போது கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வரும் அவர் மீது தலைமை மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது.
மேட்டூர் தொகுதியில் வீரப்பனின் மகள்
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினாலும், சோர்வடையாமல் மக்கள் பணிகளைத் தொடர்ந்த வித்யாராணிக்கு, இந்த முறை சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேட்டூர் தொகுதியின் வேட்பாளராக அவர் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டபோது, தனது கைகளை உயர்த்தி வெற்றிச் சைகையைக் காட்டினார். இதைக் கண்ட தொண்டர்கள் உற்சாக மிகுதியால் எழுப்பிய ஆரவாரம் அந்த மாநாட்டுத் திடலையே அதிரச் செய்தது.
