தமிழக வெற்றி கழகத்தின் தமிழ்நாடு அமைச்சரவையில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருமாவளவன் என்ன மாதிரியான முடிவெடுக்க போகிறார் என அக்கட்சி தொண்டர்கள் தவித்து வருகின்றனர்.
கடைசியில் கை கொடுத்த திருமா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாமல் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் திணறியது. இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
விஜய் தேர்தலுக்கு முன்பே ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற ஒரு வார்த்தையை தெரிவித்திருந்தார். தமிழ்நாடு அரசியலில் இதுவரை சாத்தியப்படாத கூட்டணி ஆட்சிக்கு விஜய் அழைப்பு விடுத்திருந்ததை அனைவருமே சாதாரணமாக எண்ணினர். ஆனால் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்ற நிலையில் அதில் உறுதியாக நின்றது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளது. அக்கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இங்கு தான் திருமாவளவன் சறுக்க தொடங்கினார்.
அமைச்சரவையில் இடம்.. ஆசைப்பட்ட விஜய்
காரணம் தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டும் என்பதில் விஜய் தீவிர ஆர்வம் காட்டினார். திருமாவளவனக்கு துணை முதல்வர் பதவி அல்லது அமைச்சரவையில் இடம் என பல விஷயங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு என்ற முடிவை எடுத்ததால் வேறு வழியில்லாமல் திருமாவளவனும் பாஜக உள்ளே வந்து விடக்கூடாது, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தி விடக்கூடாது என்பதால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
அதேசமயம் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் எனவும் தெரிவித்தார். இப்படி இரண்டு பக்கமும் கால் வைத்து விட்டு திருமாவளவன் ஆடும் அரசியல் ஆட்டத்தை அக்கட்சி தொண்டர்கள் யாரும் ரசிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
கிடைத்த பொன்னான வாய்ப்பு
பட்டியலின சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ச்சியாக போராடிவரும் திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பவர். இது கடந்த காலங்களில் அவரது அரசியல் பாதையை கூர்ந்து கவனித்தால் புரியும். பல நேரங்களில் தங்களை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை என அவர் வருத்தப்படவும் செய்திருக்கிறார். இப்போது கூட முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிக்கு திருமாவளவன் பெயர் முன்மொழியப்பட்டபோது அவரும் சரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்தவர்களும் சரி அகமகிழ்ந்தனர். காரணம் இப்போதாவது அப்படியான ஒரு சூழல் வந்து விட்டதே என எண்ணினர்.
ஆனால் கிடைத்த பொன்னான வாய்ப்பை திருமாவளவன் பெறவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் திணறி வருகிறார் என்பதை அவரது எண்ணங்கள் அறிந்த அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் கூட திமுக கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என பெரும்பாலான நிர்வாகிகள் தெரிவித்த நிலையில் தமிழக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. திருமாவுக்கு துணை முதல்வர் பதவி அல்லது அமைச்சரவையில் இடம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற்றால் அதில் போட்டியிடலாம் எனவும் ஆஃபர் கொடுக்கப்பட்டது.
திருமாவளவன் vs வன்னி அரசு
திருமாவளவன் தற்போது மக்களவை எம்பி யாக உள்ளார். அதே சமயம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தலைவராக வன்னி அரசு செயல்படுகிறார். இதனால் அமைச்சரவையில் இடம்பெறும் பட்சத்தில் அந்த பதவியை வன்னி அரசுக்கு கொடுக்கலாமா என திருமா பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு கட்சியின் ஒரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீங்களே அதிகாரம் மையமாக செயல்பட வேண்டும் எனவும், மாநில அரசியலில் உங்கள் ஆதிக்கம் அதிக அளவில் இருக்க வேண்டும் எனவும் அந்த தரப்பு விருப்பமும் தெரிவித்துள்ளது.
இதனால் மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி என்பது போல திருமாவளவன் ஒரு முடிவெடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இன்னும் சில நாட்களில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் திருமாவளவன் சார்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அதில் இடம்பெற்றால் நிச்சயம் தமிழக அரசியல் புதிய பரிணாமம் பெறும் என்பது நம்பிக்கையாகும். சிறுத்தை இம்முறை பாயுமா? அல்லது வழக்கம்போல பதுங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
