சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகளை முடித்துவிட்டு ஓய்வில் இருந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். விஜய்யின் இந்த ஆன்மீகப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு அவரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாகக் கோயிலுக்குச் சென்றால் கிறிஸ்தவர்களின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சத்தில்தான், திட்டமிட்டே தேர்தல் முடிந்த பிறகு விஜய் திருச்செந்தூர் சென்றுள்ளதாக வன்னி அரசு குற்றம் சாட்டியுள்ளார். ஜோதிடர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்தத் தரிசனம் நடந்ததாகக் கூறப்படும் நிலையில், இது ஒரு அரசியல் நாடகம் என அவர் சாடியுள்ளார்.
பாஜகவின் உத்தி மற்றும் மத ரீதியான விமர்சனங்கள்
தனது எக்ஸ் தளப் பதிவில் அடுக்கடுக்கான புகார்களை அடுக்கியுள்ள வன்னி அரசு, விஜய்யை 'யூதாஸ் காரியேத்து' மற்றும் 'சங் பரிவாரத்தின் கள்ளக்குழந்தை' எனச் சாடியுள்ளார். பாஜகவின் எச். ராஜா, விஜய்யை 'ஜோசப் விஜய்' என அழைத்ததை விஜய் வழிமொழிந்ததே, சிறுபான்மையின வாக்குகளைத் திமுக கூட்டணியிடம் இருந்து பிரிப்பதற்கான உத்திதான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்பு திருச்சியில் உள்ள தேவாலயத்தில் மண்டியிட்டது கிறிஸ்தவர்களை ஏமாற்றுவதற்காகத்தான் என்றும், தேர்தல் முடிந்துவிட்டதால் இப்போது யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்ற நோக்கில் முருகனிடம் விஜய் மண்டியிட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். "கள்ளத் தீர்க்கதரிசிகள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவார்கள்" என்ற விவிலிய வசனத்தைச் சுட்டிக்காட்டிய வன்னி அரசு, விஜய்யின் உண்மையான முகம் இனி நாட்டுக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார். ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக-பாஜக கூட்டணியின் வெற்றியை விஜய் விரும்புவதாக விமர்சித்து வந்த நிலையில், வன்னி அரசின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
