உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், தொண்டர்களின் பிரார்த்தனையால் தான் நலம் பெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் நேரில் வந்து தேர்தல் பணிகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். தான் இல்லாத போதும் தொகுதியில் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
பிரதமரின் உரையும் தேர்தல் இலக்கும்
தமிழகத்தின் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு, இங்குள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெரும் வெற்றியின் மூலமே நாம் பதிலளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இன்று மாலை நடைபெறவுள்ள 'எனது பூத் வலிமையான பூத்' என்ற கலந்துரையாடல் நிகழ்வில் பாஜகவினர் அனைவரும் 'நமோ ஆப்' வாயிலாகக் இணைந்து பிரதமரின் உரையைக்கேட்டுத் தேர்தல் களத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.