திருச்செந்தூர் முருகன் கோயிலில் விரைவு தரிசனம் செய்ய அறநிலையத்துறை அமைச்சரிடமே அர்ச்சகர் பணம் கேட்ட விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் ரமேஷூக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் முறைகேடு
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் விரைவு தரிசனம் செய்ய ஒருவருக்கு ரூ.1000 தொடங்கி ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு அர்ச்சகர்களும், அங்கிருக்கும் காவலாளிகளும் முறைகேடு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஆதாரத்துடன் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் திமுக அரசு எடுக்கவில்லை. இந்த சூழலில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக ரமேஷ் செயல்பட்டு வருகிறார்.
அவர் இன்று காலை மாஸ்க் அணிந்துக் கொண்டு சண்முக விலாச மண்டபம் வழியாக தரிசனம் செல்ல கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அர்ச்சகர் ஒருவருக்கு தலா ரூ.1000 என சொல்ல, அவருக்கு உதவியாக இரண்டு காவலாளிகளும் செயல்பட்டனர். உடனடியாக அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரமேஷின் இந்த அதிரடி நடவடிக்கை பக்தர்களுக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
வானதி சீனிவாசன் பாராட்டு
இந்த நிலையில் பாஜக தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை ஆய்வுப் பணிக்காக சென்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷிடம் அமைச்சர் என்று தெரியாமல் விரைவு தரிசனம் செய்ய அங்குள்ள அர்ச்சகர் ஒருவர் ரூ. 4000 கேட்டதாக வெளியான செய்தி கோவில் நிர்வாகத்தின் முகத்திரையை கிழித்துள்ளது. கையில் பணம் இல்லை என்றால் ஆன்லைன் முறையில் கூட கொடுங்கள் என்றும் கேட்பதாக கூறப்படுவது எந்த அளவிற்கு அங்கு லஞ்சம் புரையோடிப் போயிருப்பதை காட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.
கடந்த வாரம் கூட திருச்செந்தூர் கோவிலில் நடக்கும் லஞ்சம் மற்றும் கட்டணக் கொள்ளை குறித்து நான் பதிவு செய்திருந்த நிலையில் அதனை மெய்பிக்கும் விதமாக இன்று அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட செய்தி அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. திருச்செந்தூரில் மட்டுமல்ல தமிழகத்தின் பல முக்கிய கோவில்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருவதை செய்திகள் உறுதிபடுத்திக் கொண்டிருக்கிறது. இனிமேலாவது கோவில்களில் பக்தர்கள் மன நிம்மதியுடன் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத் துறையை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி பாராட்டு
நடிகையும், பாஜக நிர்வாகியுமான கஸ்தூரி, “அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் மேல் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. பாராட்டுக்கள். ஒரு அர்ச்சகரும் இன்னும் சில கோவில் ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். திருச்செந்தூர் கோயிலுக்கு பல முறை சென்றதுண்டு. கூட்டம் உள்ள கோயில்களில் விரைவு தரிசனத்துக்கு அங்கு கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் , இடைத்தரகர்கள், இப்படி எல்லோரும் அப்பாவி மக்களிடம் வசூல் செய்வது ரொம்ப நாளாக இருந்து வருகிறது. நமக்கெல்லாம் பழகியும் விட்டது. அடுத்தவேளை உணவுக்கு போராடும் ஏழை அர்ச்சர்களுக்கு மத்தியில் சில கருப்பாடுகள் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
