தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில் அவரை தொடர்ந்து விமர்சித்து வருவது தொடர்பாக திமுகவை சமூக வலைதளங்களில் இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. சட்டப்பேரவையிலும் அக்கட்சி பெரும்பான்மை நிரூபித்த நிலையில் முதலமைச்சராக ஜோசப் விஜய் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இந்த தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக மாறியது. தொடர்ந்து ஒரு நேர்காணலில், 6 மாதம் இந்த ஆட்சிக்கு டைம் கொடுத்து பார்ப்போம். அதுவரை எதுவும் செய்ய மாட்டோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆனால் அரை மணிக்கொரு முறை அக்கட்சியைச் சார்ந்த யாராவது விஜயை விமர்சித்து வருவது வாடிக்கையாக உள்ளது.
விஜய் பதவி ஏற்றது முதல் பல்வேறு அரசு தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். எந்த ஒரு அரசும் புதிதாக பொறுப்பேற்கும் போது முந்தைய அரசு செய்த விஷயங்களை ஆய்வு செய்து தங்கள் ஆட்சியில் என்னென்ன திட்டங்களை எப்படி நிறைவேற்றலாம் என்பது தொடர்பான முடிவுகளை எடுப்பது வழக்கம். ஆனால் இந்த விஷயத்தில் திமுக திசை திருப்பும் அரசியலை கையில் எடுத்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அறிவிப்பும்.. பரப்பப்படும் வதந்திகளும்
விஜய் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக தகுதியுள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவசம் மின்சாரம் என தெரிவித்தார். ஆனால் அனைத்து குடும்பங்களுக்கும் விஜய் சொன்னதாக வதந்தி பரப்பப்பட்டது. தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு என குறிப்பிடப்பட்டு அந்த தகுதி அளவு 500 யூனிட் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேபோல் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு திமுக ஆட்சியில் தொடர்ந்த 100 யூனிட் மின் இலவச மின்சாரம் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அடுத்ததாக திமுக அரசின் மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. அதனை தமிழக வெற்றிக் கழக அரசு ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க வழங்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும் நிலையில் நேற்றைய தினம் அரசு வெளியிட்ட அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க சிறிது கால தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தவெக சார்பில் வெளியான தகவலின்படி மகளிர் உரிமைத் தொகையை தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி உயர்த்தி வழங்குவதற்கு என்ன சூழல் இருக்கிறது என்பதை முதல்வர் ஆராய்ந்து வருகிறார் என சொல்லப்பட்டுள்ளது.
அதே சமயம் விஜய் போதையில்லா தமிழகம் என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டார். அதில் பெரும்பாலான கடைகள் உத்தரவு வந்த முதல் நாளிலேயே மூடப்பட்டது. தொடர்ந்து 21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆனால் இது எங்கள் ஆட்சியில் ஏற்கனவே இருந்தது என திமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆனால் அனைத்து ஆட்சியிலும் சொல்லப்பட்டாலும் அவை பின்பற்றப்படுவதில்லை. ஆனால் தவெக அரசில் கடுமையாக பின்பற்றப்படும் என தவெக தரப்பு பதிலடி கொடுத்தது.
இவற்றையெல்லாம் தாண்டி முதல்முறையாக சட்டப்பேரவையில் அடி எடுத்து வைத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாறுமாறாக வறுத்தெடுத்தார். அதற்கு பதில் எதுவும் கொடுக்காத முதலமைச்சர் விஜய் சில மணி நேரங்களுக்கு பிறகு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு திமுகவை கடுமையாக சாடினார். இதற்கும் வீட்டிற்கு சென்று ட்வீட் போடுகிறார் என விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
மேலும் திமுகவில் இருக்கும் வெளியில் பிரபலமானவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலர் விஜயை முதலமைச்சர் என்ற முறையில் மரியாதைக்குரிய வகையில் அணுகாமல் விமர்சிக்கின்றனர். இதனைக் தலைமை வேடிக்கை பார்ப்பது சரியல்ல என்பது பலரின் எண்ணமாக உள்ளது.
இப்படி ஆட்சிக்கு வந்ததும் ஒரு கட்சிக்கு நெருக்கடி கொடுக்கப்படுவது என்பது இதுவரை பார்க்காத ஒன்றாக உள்ளதாக அரசியல் களத்தில் பலரும் தெரிவிக்கின்றனர். எந்த கட்சிக்கும் சில காலம் அவகாசம் கொடுக்க வேண்டும். அவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் நெருக்கடி, அழுத்தம் கொடுக்கலாம். ஆனால் வந்த நாளில் இருந்தே திமுக அழுத்தம் கொடுப்பது சரியல்ல, சொன்ன சொல்படி 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும். அப்போது நீங்களே நினைத்தாலும் மக்கள் வழங்கும் தீர்ப்பை மாற்ற முடியாது எனவும் அட்வைஸ் கொடுத்துள்ளனர்.
