தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் 15-ஆம் தேதி 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான தொகையுடன், கோடைகால சிறப்பு நிதியும் சேர்த்து மொத்தம் 5,000 ரூபாய் முன்கூட்டியே பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்பட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசை அமைத்த நிலையில், இந்த மாதத்திற்கான தொகை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட மே மாத நிதி
பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், மே மாதத்திற்கான 1,000 ரூபாய் உரிமைத் தொகையை இன்று (மே 15, வெள்ளிக்கிழமை) பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி 1.31 கோடி பெண்களின் கணக்கிற்கு நிதி சென்றடைந்துள்ளது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தாலும், நிர்வாக நடைமுறைகள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக தற்போதைக்கு பழைய திட்டத்தின் பெயரிலேயே இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 'புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கான உதவித்தொகையும் தங்குதடையின்றி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் மாற்றமும் புதிய அறிவிப்பும்
தற்போது இத்திட்டத்தைப் பெயர் மாற்றம் செய்யவும், சீரமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பணிகள் முழுமையடைந்த பிறகு, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி, மகளிர் உரிமைத் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை தடையின்றி நிதி வழங்க முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
