தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்துள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரையின் போது மேற்கொண்ட ஒரு செயல் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பரப்புரையின் இறுதி நாட்களில் அவர் நடத்திய ரோடு ஷோவின் போது புறா ஒன்றைப் பறக்கவிட்ட விவகாரத்தில், விலங்கு நல அமைப்பான பீட்டா (PETA) தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
பரப்புரை ஓய்ந்த பின்னரும் ஓயாத சர்ச்சை
கடந்த 37 நாட்களாகத் தமிழகத்தில் அனல் பறந்த தேர்தல் பரப்புரைகள் ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றன. இந்த நீண்ட காலப் பரப்புரையில் விஜய்யின் பல கூட்டங்கள் பாதுகாப்பு காரணங்களாலும், அனுமதி மறுக்கப்பட்டதாலும் ரத்து செய்யப்பட்டன. எனினும், அவர் மேற்கொண்ட ரோடு ஷோ ஒன்றில், தவெக கட்சியின் வண்ணங்கள் பூசப்பட்ட ஒரு புறாவைக் கையில் ஏந்தி அதனைப் பறக்கவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், இதற்குப் பீட்டா அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துக் கடிதம் ஒன்றை விஜய்க்கு அனுப்பியுள்ளது.
பீட்டாவின் கடிதமும் கட்சித் தொண்டர்களின் ஆதங்கமும்
விஜய்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அரசியல் ஆதாயங்களுக்காக விலங்குகளைப் பயன்படுத்த வேண்டாம்; விலங்குகள் எந்தவொரு அரசியல் கட்சியையும் சார்ந்தது அல்ல" என்று பீட்டா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், புறாவின் இறக்கைகள் மற்றும் உடல் மீது இரசாயன வண்ணங்களைப் பூசுவது அதன் தோலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. இது போன்ற செயல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கத் தனது ஆதரவாளர்களிடையே விஜய் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கட்சியின் முதல் மாநாடு முதலே அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வரும் நிலையில், தேர்தல் முடிந்த பின்னரும் இந்த 'புறா விவகாரம்' விஸ்வரூபம் எடுத்துள்ளது விஜய் ஆதரவாளர்களிடையே கவலையைஏற்படுத்தியுள்ளது.
