தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள வார்த்தைப்போர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் சீமானின் பலப்பரீட்சை
தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வரும் நாம் தமிழர் கட்சி, வருகின்ற 21-ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகம் செய்யவுள்ளார். அத்துடன் சீமான் இந்த முறை எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற முக்கிய அறிவிப்பும் வெளியாகவுள்ளதால், அக்கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
சீமானின் கேள்வி!
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குத் தனது பாணியில் பதிலளித்த சீமான், "தம்பி இப்போதுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார். நான் பல ஆண்டுகளாகக் கட்சியை நடத்தி, எந்தக் கூட்டணியும் இன்றி மாநிலக் கட்சி அங்கீகாரத்தைப் பெற்றுள்ளேன். முறைப்படி பார்த்தால் நான்தான் அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டும், அவர் எனக்கு அழைப்பு விடுக்க முடியாது" என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், விஜய் பேசுவதெல்லாம் தன்னுடைய வசனங்கள் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"டைம் பாஸுக்காக கட்சி நடத்துகிறார்"
சீமானின் இந்த கருத்துக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்மல் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீமானின் பேச்சைக் கிண்டல் செய்யும் விதமாகப் பதிலளித்த அவர், "18 வருடங்களாகக் கட்சி நடத்தும் சீமான், எதற்காகக் கட்சி நடத்துகிறார் என்பதே தெரியவில்லை. ஆட்சி வேண்டாம், பதவி வேண்டாம் என்று கூறும் அவர், ஏதோ மேடைகளில் பேசுவதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் (Time Pass) கட்சி நடத்துவது போல் தெரிகிறது. அவரை ஊடகங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்வதால்தான் இதுபோன்று பேசி வருகிறார்" என்று விமர்சித்தார்.
கூட்டணி குறித்த தவெக-வின் நிலைப்பாடு
திமுக, பாஜக மற்றும் நாதக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மல் குமார், கூட்டணி என்பது மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும் என்றார். தற்போதைய நிலையில் தவெக தனித்து நின்றாலும் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் என்ற தன்னம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
சீறியெழுந்த நாதக தொண்டர்கள்
நிர்மல் குமாரின் இந்த விமர்சனத்தால் கொதிப்படைந்த நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள், சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். "உங்கள் தலைவர் விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு யாரிடம் ஆலோசனைக் கேட்டார் என்பதை மறந்துவிட்டீர்களா? அப்போது சீமான் அண்ணன் டைம் பாஸ் செய்தாரா?" என்று காட்டமான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையிலான இந்த மோதல் வரும் நாட்களில் தேர்தல் களத்தை இன்னும் சூடாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.