தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்கும் நிகழ்வு, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் (டி.நகர்), ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் முறைப்படி பதவியேற்றனர்.
சிவகாசி எம்எல்ஏவின் மறதியால் ஏற்பட்ட பரபரப்பு
சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பின் போது, அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வழங்கப்படும் '17 சி' படிவம் எனும் வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்தச் சான்றிதழுடன் வந்து பதவியேற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகாசி தொகுதி எம்எல்ஏ கீர்த்தனா மட்டும் தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வர மறந்துவிட்டார். இதனால் அவர் உடனடியாகப் பதவியேற்க முடியாத சூழல் உருவாகி, அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
முதல்வரின் அமைச்சரவையில் இடம்பிடித்த ஒரே பெண்
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கீர்த்தனாவுக்கு, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். சான்றிதழை எடுத்து வருவதற்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அவர், விரைவில் அதனைச் சட்டப்பேரவைச் செயலரிடம் சமர்ப்பித்து எம்எல்ஏவாகப் பதவியேற்பார் என்று பேரவை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
