தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அக்கட்சியின் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ எம்.வி.கருப்பையா கிணற்று நீரில் மிதந்து ஆசனம் செய்து தனது வினோதமான நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.வி.கருப்பையா. இந்தத் தேர்தலில் தவெக அமோக வெற்றி பெற்று, விஜய் நாட்டின் முதலமைச்சராக அரியணை ஏற வேண்டும் என்று சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் அவர் மனமுருகி வேண்டியிருந்தார். அதன்படியே தேர்தலில் தவெக வென்று விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.
வைகாசி திருவிழாவில் தவெக கொடியுடன் ஆசனம்
இந்நிலையில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று வெகுவிமரிசையாகத் தொடங்கியது. இதையொட்டி, தனது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நகரி சாலையில் உள்ள ஆலங்கொட்டாரக் கிணற்றில் எம்.எல்.ஏ கருப்பையா இறங்கினார். கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏந்தியபடி, கிணற்று நீரில் மல்லாந்த நிலையில் மிதந்து சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து யோகாசனங்களைச் செய்து அவர் நேர்த்திக்கடனைப் பூர்த்தி செய்தார். இந்த அசாதாரண நிகழ்வைக் காண்பதற்காகக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அங்கு திரண்டு பங்கேற்றனர்.
ஜெயலலிதா காலத்து சாதனை பின்னணி
தற்போது தவெக எம்.எல்.ஏ-வாக இருக்கும் கருப்பையா, இதற்கு முன்பாக அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், இதேபோன்று நீண்ட நேரம் தண்ணீரில் மிதந்து பல்வேறு சாதனைகளைப் புரிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். தற்போது தவெக தலைவருக்காக அவர் மீண்டும் இந்தச் சாதனையைச் செய்து காட்டியுள்ளார்.
