தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 233 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்ட நிலையில், எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது. தேர்தல் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தற்போது ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
திருச்செந்தூர் வருகையும் தரிசனமும்
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்த விஜய், அங்கிருந்து கார் வழியாக திருச்செந்தூரை சென்றடைந்தார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இக்கோயிலின் கடற்கரையில் கால்களை நனைத்து வணங்கிய அவர், பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமியைத் தரிசித்தார். அப்போது அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்த நிலையில், விஜய்க்கு 'வெற்றிவேல்' நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்ததும் அவர் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டார்.
