தமிழகத்தில் பெண்களுக்கு எதிராகவும், சிறுமிகளுக்கு எதிராகவும் தொடர்ந்து அரங்கேறி வரும் கொடூரமான குற்றங்களைச் சுட்டிக்காட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். தூத்துக்குடி விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்று வினவியுள்ளார். மதுராந்தகத்தில் 14 வயதுச் சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு 10 கிலோமீட்டர் நடந்து வந்து காவல் நிலையத்தை அடைந்த துயரம் மற்றும் கிருஷ்ணகிரியில் நடந்த முதியவர் கொலை போன்ற நிகழ்வுகள் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கி எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிர்வாகத் தோல்வியும் "கல்லாப்பெட்டி" அரசியலும்
சட்டம்-ஒழுங்கைக் காப்பதிலும், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் திமுக அரசு முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டதாக விஜய் சாடியுள்ளார். கடந்த ஒன்றரை வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் நடந்துள்ள கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டு மற்றும் பாலியல் வன்கொடுமைகளைப் பட்டியலிட்டுள்ள அவர், இவ்வளவு நடக்கும்போதும் முதலமைச்சர் எதற்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் பாதுகாப்பைக் கவனிக்காமல், தனது கூட்டணியைத் தக்கவைப்பதிலும் "கல்லாப்பெட்டி" நிரப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திமுக அரசுக்கு, "இப்படி ஒரு ஆட்சி தேவையா?" என மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். கடமை தவறிய இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத் தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
