கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட காசிமேடு பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 43-ஆவது வார்டு வட்டச் செயலாளர் பாம்பு தினேஷ் என்பவர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். வாக்குப்பதிவு நாளன்று, தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாம்பு தினேஷ் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறுமியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார் பாம்பு தினேஷைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல், தவெகவைச் சுற்றி மேலும் சில சர்ச்சைகள் எழுந்துள்ளன. ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் ஆட்டோ ஓட்டுநர் விஜய் தாமு, தனது பிறந்தநாளைக் கொண்டாடும் போது தொண்டர்கள் பரிசளித்த வாளால் கேக்கை வெட்டியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு சம்பவமாக, ராமநாதபுரத்தில் கட்சியின் துண்டு அணிந்திருந்த தவெகவினர் 6 பேர், காரில் போக்குவரத்து விதிகளை மீறிச் செயல்பட்டதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள தவெகவின் நிர்வாகிகள் இது போன்ற அடுத்தடுத்த விவகாரங்களில் சிக்கி வருவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
