சட்டப்பேரவை தேர்தலை இலக்காகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் களப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் வேளையில், அக்கட்சித் தொண்டர்களின் சில அத்துமீறிய செயல்கள் பொதுமக்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளன. ஏற்கனவே திரையரங்குகளில் கொடியேற்றுவது, பொது இடங்களில் கூச்சலிடுவது போன்ற செயல்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலில் தவெக கட்சியின் பாடல் ஒலிக்கச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பக்தர்களுக்குத் தேவையான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதற்காக மலைக்கோவில் மற்றும் கிரிவலப் பாதைகளில் அமைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கியில், விஜய் ரசிகர் ஒருவர் தனது செல்போனை இணைத்து கட்சிப் பாடலை ஒலிக்கச் செய்துள்ளார். மனநிம்மதி தேடி வரும் புனித தலத்தில் அரங்கேறிய இந்தச் செயலால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
தொடரும் சர்ச்சைகளும் கட்சித் தலைமையின் எச்சரிக்கையும்
இந்த விவகாரம் தொடர்பாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக நிர்வாகிகளின் அடுத்தடுத்த செயல்பாடுகள் கட்சிக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஒருவர் கிரேன் மூலம் மாலை அணிவித்து, சாலையில் கேக் வெட்டிப் பிறந்தநாள் கொண்டாடியது பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக அமைந்தது.
இச்சம்பவம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "நிர்வாகிகள் தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும், மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும், அந்த எச்சரிக்கையைத் துளியும் பொருட்படுத்தாமல் பழனி கோயில் போன்ற இடங்களில் தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கட்சித் தலைமையைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்க்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறதா தொண்டர்களின் வேகம்?
கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டிய தொண்டர்களே, இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி கட்சிக்குக் கெட்ட பெயரை உருவாக்குவதாகத் தீவிரத் தொண்டர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். "தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் விஜய்க்குத் தான் அவப்பெயரைத் தேடித்தரும்" என இணையதளங்களில் கட்சியின் ஆதரவாளர்களே ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருபுறம் கட்சிப் பணிகள் மும்முரமாக நடந்தாலும், மறுபுறம் தொண்டர்களின் கட்டுப்பாடற்ற இத்தகைய செயல்பாடுகள் வரவிருக்கும் தேர்தலில் கட்சிக்குச் சவாலாக அமையக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
